நெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் வாக்காளர் அடையாள அட்டை - கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன் வழங்கினார்
நெல்லையில் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடைத்துறை இயக்குனருமான ஞானசேகரன் வழங்கினார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், கால்நடை பராமரிப்பு துறை இயக்குனருமான ஞானசேகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 12,68,253 பேரும், பெண்கள் 13,11,242 பேரும், இதர பிரிவினர் 93 பேரும், மொத்தம் 25,79,588 பேர் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட 26,107 பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர்” என்றார்.
இந்த கூட்டத்தில், நெல்லையை சேர்ந்த பார்வையற்ற சேர்மன்துரை மற்றும் இசக்கிமுத்து ஆகியோருக்கு பிரெய்லி எழுத்தில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை, ஞானசேகரன் வழங்கினார்.
கூட்டத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, தேர்தல் தாசில்தார் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story