ஆரணி அருகே, தடுப்பூசி போடப்பட்ட குழந்தை சாவு - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


ஆரணி அருகே, தடுப்பூசி போடப்பட்ட குழந்தை சாவு - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Feb 2020 6:03 AM IST (Updated: 14 Feb 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே தடுப்பூசி போடப்பட்டதால் 4 மாத ஆண் குழந்தை இறந்ததாகக்கூறி, ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி லாரி டிரைவர். இவரது மனைவி தமிழரசி (வயது 21). இவர்களுக்கு லித்தே‌‌ஷ் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது பணியில் இருந்த செவிலியர் செந்தமிழ்செல்வி, குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை குழந்தைக்கு இருமல் அதிகமாகி திடீரென இறந்துவிட்டது. பெற்றோர், உறவினர்கள் நன்றாக இருந்த குழந்தை தடுப்பூசி போட்டதால்தான் இறந்துவிட்டதாக கூறி நெசல் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் வெண்ணிலாவிடம் தகராறு செய்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகா‌‌ஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.

பின்னர் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக கூறப்படுவது தவறு, ஆனால் உங்களுடைய கோரிக்கையை ஏற்று குழந்தையை பிரேத பரிசோதனை செய்து உண்மை நிலை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

அதன் பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது வழக்கும் வேண்டாம், குழந்தையை பிரேத பரிசோதனையும் செய்ய வேண்டாம் என பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story