அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி அடித்துக் கொலை: தலைமறைவாக இருந்த காவலாளி கோர்ட்டில் சரண்


அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி அடித்துக் கொலை: தலைமறைவாக இருந்த காவலாளி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:00 PM GMT (Updated: 14 Feb 2020 1:59 PM GMT)

தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காவலாளி பத்மநாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய சுரேஷ் (வயது 39), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரியின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால், கஸ்தூரி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து தாயாரை கவனித்து வந்தார்.

கடந்த 9–ந் தேதி இரவு மரிய சுரேஷ் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள மனைவியை பார்ப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த காவலாளி ரெத்தினராஜ் (வயது 26), ராஜகுமார் (36) ஆகியோர் சேர்ந்து மரிய சுரேசை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மரிய சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளி ரெத்தினராஜ் உள்பட 2 பேரை தேடி வந்தனர். இதற்கிடையே ரெத்தினராஜ் தலைமறைவானார்.

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மரிய சுரேசின் உறவினர்கள் தக்கலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிட்டப்பட்டது.

தொடர்ந்து, மரியசுரேசை தாக்கிய ராஜகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜகுமார் நித்திரவிளை அருகே கிராத்தூரை சேர்ந்தவர். தனது குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதித்து இருந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று ஆஸ்பத்தியில் தங்கி இருந்த போது காவலாளி ரெத்தினராஜுடன் சேர்ந்து மரிய சுரேசை தாக்கியதாக தெரியவந்தது.

இதையடுத்து காவலாளி ரெத்தினராஜை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று ரெத்தினராஜ் பத்மநாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரிடம் விசாரணை நடத்திய பின்புதான் கொலை தொடர்பான முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story