காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் காதல் ஜோடிகள் குவிந்தனர்


காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் காதல் ஜோடிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Feb 2020 3:30 AM IST (Updated: 14 Feb 2020 7:59 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரி உள்பட சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந்தனர். அத்துமீறியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி, 

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் களை கட்டும். பல்வேறு நாடுகளில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் காதல் ஜோடிகள் கடற்கரையில் தங்கள் காதலை மேற்கத்திய பாணியில் வெளிப்படுத்துவார்கள். இதுபோல வட மாநிலங்களில் இருந்தும் பல காதல் ஜோடிகள் காதலர் தினத்தின் முந்தின நாளே கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பீதியால் கன்னியாகுமரியில் வெளிநாட்டு காதல் ஜோடிகள் வருகை மிகவும் குறைந்தது.

ஆனால் உள்நாட்டு காதல் ஜோடிகளும், வெளிமாநில ஜோடிகளும் வந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் ஜோடியாக சுற்றி வந்தனர். அன்பை வெளிப்படுத்தும் வகையில் சங்கு, அரிசி வாங்கி அதில் தங்கள் பெயரை பொறித்து மகிழ்ந்தனர்.

இளம்வயது காதலர்களுக்கு போட்டி போடும் வகையில் நேற்று கன்னியாகுமரியில் கல்லூரி மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு ஜோடியாக இருசக்கர வாகனங்களில் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம இருந்தனர். பல ஜோடிகள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நான்கு வழிச்சாலையில் பாய்ந்து வந்தனர். இவர்களில் சிலரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

வாகனங்கள் இல்லாத ஜோடிகள் பஸ்களில் வந்து இறங்கினார். அவர்கள் புத்தகப் பையை சுமந்த வண்ணம் கடற்கரையில் வலம் வந்தனர். சிலர் பொது இடம் என்பதையும் மறந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அத்துமீறிய ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்காக கன்னியாகுமரி கடற்கரை, பூங்கா, கடற்கரை சாலை போன்ற பகுதியில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு நேற்று பல காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அருவில் குளித்து, அருவியின் மேல் பகுதியில் உள்ள படகுதுறையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுபோல், மாத்தூர் தொட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற இடங்களிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

Next Story