சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்


சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2020 11:15 PM GMT (Updated: 16 Feb 2020 5:07 PM GMT)

சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி, வீரராகவபுரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் நந்தீஷ்(வயது 19). இவர், நேற்று காலை தனது வீட்டில் இருந்து பால் பாக்கெட் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

சென்னீர்குப்பம்-ஆவடி சாலையில் காடுவெட்டி அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார்சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தீஷ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தீஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான நந்தீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் நந்தீஷ் விபத்தில் பலியானதை அறிந்து ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென பூந்தமல்லி-ஆவடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் சாலையில் சுற்றும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார். மேலும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.

விபத்தில் மாடு இறந்து போனால் உடனடியாக வரும் மாட்டின் உரிமையாளர்கள், மனிதர்கள் யாராவது பலியானால் கண்டுகொள்வது இல்லை. மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடுவதை தடுக்கவும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் திருவேற்காடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story