நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் - ப.சிதம்பரம் வேண்டுகோள்
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேவகோட்டை,
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேவகோட்டை அண்ணா அரங்கத்தில் மத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் பொருள் குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார்.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:- குடியுரிமை சட்டம் தான் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்தது போல் இந்தியா முழுவதும் மக்கள் நாள்தோறும் போராடி வருகிறார்கள். இந்திய அரசியல் சாசன சட்டம் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் எல்லாம் அரசியல் சாசனத்தில் வரக்கூடிய 25 வரி குடியுரிமை சட்டம் பற்றி இயற்றுவதற்கு முன்பு 3 மாதங்கள் விவாதம் நடத்தி முடித்து சட்டத்தை ஏற்றினர்.
ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு உடனே அமைச்சரவையை கூட்டி மாலை 6 மணிக்கு ஒப்புதல் பெற்று மசோதாவை நிறைவேற்றினர். இந்தியாவிற்கு வெளியே 8 நாடுகள் இருப்பதை மறைத்துவிட்டு மூன்று அண்டை நாடுகள் இருக்கிறது என கூறுகிறது. இந்த 3 அண்டை நாடுகளில் 6 மதத்தினர் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பது உண்மை.
அதேமாதிரி இலங்கையில் தமிழர்களும், மியான்மரில் இந்தியர்களும் அச்சுறுத்த படுகிறார்கள், பாகிஸ்தானில் அகமதியர்கள் அச்சுறுத்த படுகிறார்கள். அவர்கள் முஸ்லிமே இல்லை என கூறுகிறார்கள். ஆறு பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்திருந்தால் குடியுரிமை தரப்படும் இந்தியாவில் இருப்பவர்களை இந்த சட்டம் பாதிக்காது என்கிறார் பிரதமர். அது தவறு. இந்தியாவில் இருப்பவர்களுக்குத்தான் இந்த சட்டம் பாயும். நாளை வர போகிறவர்களுக்கு இந்த சட்டம் அல்ல 30.12.2016 வரை இந்தியாவிற்கு வந்த அவர்களுக்குத்தான் இந்தச் சட்டம் அப்படி வந்தவர்களில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். முஸ்லிம்களைத் தவிர அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் ஏன் இந்த பாகுபாடு என்று பிரதமர் கூறுகிறார். இந்த நாட்டின் வலிமையே பல மொழிகள், பல கலாசாரங்கள் தான். நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், காங்கிரஸ் தலைமை நிலைய பேச்சாளர் அப்பச்சி சபாபதி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் ஹைதர் அலி, திராவிடர் கழக மண்டல தலைவர் சாமி திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் குழந்தைசாமி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
காங்கிரஸ் உறுப்பினர் மீராஉசேன், முன்னாள் தேவகோட்டை நகர சபை தலைவர் வேலுசாமி, காங்கிரஸ் பொது செயலாளர் சானாவயல் முத்துராமன், மாவட்ட துணைத்தலைவர் பாப்பாங்கோட்டை பூமிநாதன், வர்த்தகர் சங்க பிரமுகர் சண்முகம், நகர தலைவர் லோகநாதன், பூங்குடி செல்லம், புஸ்பராஜா, தேவகோட்டை வெங்கடாசலம், பிரபாகரன், ராஜ்மோகன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் சஞ்சய், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு துணை தலைவர் டாக்டர் செல்வராஜ், மானாமதுரை முன்னாள் சட்டமன்ற தொகுதி பொது செயலாளர் சஞ்சய்காந்தி, காரைக்குடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் தேவகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள் வயல்கோட்டை பாஸ்கர், தர்மராஜன், ரவி, மாவட்ட பிரதிநிதி பவுல் ஆரோக்கியசாமி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story