ஊட்டியில், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்
ஊட்டியில் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டி ஏ.டி.சி. பகுதி ஆட்டோ நிறுத்துமிடத்தில் இருந்து சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு வாடகைக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து எல்க்ஹில் பகுதிக்கு செல்ல பொதுமக்களிடம் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து எல்க்ஹில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் பகுதிக்கு செல்லும் மக்களை குறைந்த வாடகை கட்டணத்தில் அழைத்து சென்று வருகின்றனர். அதன் காரணமாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.டி.சி. ஆட்டோ டிரைவர்களுக்கும், எல்க்ஹில் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து எல்க்ஹில் ஆட்டோ டிரைவர்கள் ஊட்டி நகர நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தை தொடங்கினர். அதன் பின்னர் அவர்களை ஆட்டோக்களை இயக்க விடாமல் சிலர் தடுக்க முயன்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் அந்த சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு எதிராக மற்றொரு சங்கம் மேல்முறையீடு செய்தது.
வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல எதிர்மனுதாரர்கள் தடை செய்யக்கூடாது, அந்த இடத்தில் நிரந்தரமாக நிறுத்தாமல் தயாராக உள்ள ஒரு பயணியை ஏற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் வரை மட்டுமே ஆட்டோவை நிறுத்தி பயணியை ஏற்றிக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஏ.டி.சி. ஆட்டோ டிரைவர்கள் தங்கள் பகுதியில் எல்க்ஹில் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்று கூறி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல் போலீசாரிடம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். நீதிமன்ற உத்தரவு நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மற்றொரு தரப்பினர் கூறினர். தற்காலிகமாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்று உத்தரவில் கூறப்பட்டு உள்ளது என்று எல்க்ஹில் ஆட்டோ டிரைவர்கள் கூறினர். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு முழுமையாக வந்த பின்னர் முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆங்காங்கே ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story