வங்கி பண பரிவர்த்தனை பணிகள் தாமதமாகும்: ‘ஊராட்சி தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வேண்டும்’ கலெக்டரிடம் கோரிக்கை


வங்கி பண பரிவர்த்தனை பணிகள் தாமதமாகும்: ‘ஊராட்சி தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வேண்டும்’ கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2020 4:15 AM IST (Updated: 17 Feb 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

வங்கி பணபரிவர்த்தனை பணிகள் தாமதமாகும் என்பதால் ஊராட்சி தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வேண்டும் என கலெக்டர் எஸ்.சிவராசுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன்.ராஜேந்திரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ஊராட்சிகள் தன்னிச்சையாக செயல்படும் நிலையில் பஞ்சாயத்துராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 25.10.1996 முதல் 24.10.2016 வரை ஊராட்சியில் செயல்படுத்தப்படும் கட்டாய கடமையான அடிப்படை பயன்கள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பண பரிவர்த்தனை, அதுவும் மூன்றாம் நபருக்கு வங்கிகள் மூலம் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊராட்சியின் கட்டாய கடமை எனக்கூறும் குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற பணிகள் செய்யும்போது தாமதம் ஆகும். அவசர அவசிய காரியங்களுக்கு பணியாளர்களை கூப்பிட்டால் தொகை நேரிடையாக வழங்கினால் மட்டுமே வருகிறார்கள். இதனால், அவர்கள் வங்கி மூலம் தொகை வழங்குவதை விரும்பவில்லை. மேலும் பொதுமக்களுக்கு நேரிடையாக பண பரிவர்த்தனை செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களால் இயலவில்லை. எனவே, கடந்த 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த காசோலையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் நேரிடையாக கையெழுத்திடும் அதிகாரத்தை தாங்கள் பெற்றுத்தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் எஸ்.சிவராசு கூறியதாவது:-
ஊராட்சிகள் வங்கிகள் மூலமே பணபரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த நடைமுறை ஆகும். வேலை செய்பவர்களுக்கு அவரது வங்கி கணக்கிற்கு தொகை நேரடியாக சென்று விடும். இதில் என்ன சிக்கல் உள்ளது?. எனவே, ஊராட்சிகளில் பணிகள் தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஊராட்சி தலைவர் ஒரு வேலை சொன்னால், யாரும் மறுக்கமாட்டார்கள். வங்கி கணக்கு தொடங்குவதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோடைகாலம் வந்து விட்டதால் வறட்சியான பகுதியான மணப்பாறை, வையம்பட்டி, உப்பிலியபுரம், மருங்காபுரி, துறையூர் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செயலாளர் தியாகராஜன், துறையூர் அருகே உள்ள வடக்குப்பட்டியில் வசித்து வருகிறார். அவர் நேற்று கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், என் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவருடன் முன்விரோதம் இருந்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரர் என் வீட்டை நோக்கியும், கழிவறையை பார்த்து கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளார். அதைத்தட்டிக்கேட்டபோது, அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுகிறார். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.

Next Story