சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து பா.ஜனதா 400 இடங்களில் போராட்டம் 25-ந் தேதி நடக்கிறது
சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து வருகிற 25-ந் தேதி 400 இடங்களில் பாரதீய ஜனதா போராட்டம் நடத்துகிறது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் மோதல் காரணமாக சிவசேனா பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தது. தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ள பாரதீய ஜனதா, மக்கள் தீர்ப்பை மீறி சுயலாபத்துக்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில் சிவசேனா கூட்டணி அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாக கூறி, இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.
400 இடங்களில்...
இது தொடர்பாக மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-
சிவசேனா கூட்டணி அரசு குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் மக்கள் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த அரசு தவறிவிட்டது.
இதை கண்டித்து மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான வருகிற 25-ந்தேதி மாநிலம் முழுவதும் 400 இடங்களில் பாரதீய ஜனதா போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story