ஆற்றில் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓட்டம்
மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளியவர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் அருகே அரியாற்றில் இருந்து நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் மணலை திருடி மாட்டு வண்டிகளில் ஏற்றி கடத்தப்படுவதாக மணப்பாறை போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வருவாய்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அதிகாரிகளை பார்த்ததும் ஆற்றில் மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதைத்தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் தப்பிச் சென்றவர்கள் குறித்து அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், அரியாற்றில் பகல் நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மர்ம நபர்கள் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் ஆற்றில் சல்லடை வைத்து மணலை சலித்து விற்பதால் நல்ல விலை கிடைக்கிறது. இதனால், ஆற்றில் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் ஆயிரக்கணக்கான யூனிட் மணல் திருட்டு போய் இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது கூட மணல் அள்ளியவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மணல் திருடும் சம்பவம் நீண்டுகொண்டேதான் போகும். வருங்காலத்தில் ஆறு இருப்பதே தெரியாமல் போய் விடும் என்றனர்.
Related Tags :
Next Story