தஞ்சாவூர் செங்கிப்பட்டி- திருச்சி துவாக்குடியில் நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிப்பு


தஞ்சாவூர் செங்கிப்பட்டி- திருச்சி துவாக்குடியில் நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 4:45 AM IST (Updated: 18 Feb 2020 10:11 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் செங்கிப்பட்டி- திருச்சி துவாக்குடியில் 1849-ம் ஆண்டில் நடப்பட்ட தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் வித்தியாசமான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் இருப்பதாக கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன், தொல்லியல் ஆய்வு கழக தலைவர் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி மணிசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் செங்கிப்பட்டியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

1849-ம்ஆண்டு நடப்பட்டது

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. தற்போது செங்கிப்பட்டியில் மேலும் 2 மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியில் இருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் 7 நம்பர் சாலை, 1849-ம் ஆண்டில் போடப்பட்டது என்றும், இது கப்பிச்சாலையாகவும், நல்ல நிலையில் இருந்ததாகவும் லீவிஸ் மூர் என்ற ஆங்கிலேயர் 1878-ம் ஆண்டு எழுதிய புத்தகத்தில் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மைல் கற்கள் கடந்த 1849-ம் ஆண்டு நடப்பட்டு உள்ளதை உறுதி செய்ய முடிகிறது.

ஆங்கிலத்தில் ஊர் பெயர்

தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 2 மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட்டவை என்பதை பொறிக்கப்பட்டு உள்ள தூரத்தை அடிப்படையாகக்கொண்டு உறுதி செய்ய முடிகிறது. முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், 2-வது மைல் கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 2 மைல்கற்களிலும் முதலாவதாக ஆங்கிலத்தில் ஊர்ப்பெயரும், அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், 2-வதாக தமிழ் எழுத்தில் ஊர்ப்பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டில், இருந்தது என்பதற்கான முக்கியத்துவமான சான்றாக உள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட மைல் கற்களின் எழுத்துகள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட்டு உள்ள தன்மை, கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இந்த மைல் கற்கள் ஒரே காலத்திலானவை. இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்று இருந்ததும், தஞ்சாவூர், திருச்சி ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலை பெற்று இருந்திருப்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story