மாவட்ட செய்திகள்

சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர் + "||" + 60 passengers survived heavy fire on bus in Salem

சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்

சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்
சேலத்தில் ஓடும் பஸ்சில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் நேற்று காலை சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,

சேலத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு பெரியாண்டிச்சி அம்மன் என்ற பெயரில் தனியார் டவுன் பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று காலை இளம்பிள்ளையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. பஸ்சை இளம்பிள்ளையை சேர்ந்த டிரைவர் கார்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் சேலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என 60 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.


இந்த பஸ் நேற்று காலை 9.15 மணி அளவில் சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே உள்ள இணைப்பு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் திரும்பியபோது பஸ்சில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதைப் பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு, அய்யோ ‘புகை, புகை’ என்று சத்தம் போட்டனர். இதனால் சுதாரித்துக்கொண்ட டிரைவர் கார்த்தி திடீரென பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

தீயை அணைக்க முயன்றனர்

இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக பஸ்சை விட்டு கீழே இறங்கினர். ஒரு சிலர் பஸ்சின் படிக்கட்டில் இருந்து கீழே குதித்தனர். மேலும் சிலர் பஸ்சின் ஜன்னல் வழியாக குதித்து இறங்கினர். இந்த நிலையில் திடீரென்று பஸ் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பஸ்சில் இருந்த டீசல் டேங்கர் வெடித்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் தீ மள, மளவென பஸ் முழுவதும் பரவியது. இதனால் பஸ் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் கிடந்த மண்ணை அள்ளி பஸ்சில் போட்டு தீயை அணைக்க முயன்றனர். மேலும் அந்த பகுதியில் கடை வைத்து உள்ள சிலர் கடையில் வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

பயணிகள் உயிர் தப்பினர்

உடனடியாக சிலர் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ்சில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. ஓடும் பஸ்சில் ஏற்பட்ட இந்த பயங்கர தீயில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது.

இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த பேட்டரியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாகவும் அதில் இருந்து தீப்பிடித்து உள்ளது என்றும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமர்த்தியமாக டிரைவர் திடீரென்று பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தியதால் 60 பயணிகளும் பஸ்சில் இருந்து வெளியேறிவிட்டனர். சிறிது நேரம் தாமதம் செய்து இருந்தாலும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தால் நேற்று காலை சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வலம்புரிவிளையில் 4-வது நாளாக எரியும் தீ: நச்சு புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 4-வது நாளாக எரியும் தீயால் உருவான நச்சு புகை காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
2. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்; வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக தீ எரிகிறது. இதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. மத்திகிரி கால்நடை பண்ணையில் பயங்கர தீ
மத்திகிரி கால்நடை பண்ணையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
4. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
5. சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் திடீர் தீ; பசு கருகி செத்தது
சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்து பசு கருகி பரிதாபமாக செத்தது.