ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4 கோடியில் மணிக்கூண்டு சீரமைப்பு: தஞ்சை ராஜப்பா பூங்காவில் கடைகளை இடிக்கும் பணி தொடக்கம்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4 கோடியில் மணிக்கூண்டு சீரமைப்பு: தஞ்சை ராஜப்பா பூங்காவில் கடைகளை இடிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:45 PM GMT (Updated: 18 Feb 2020 7:21 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4 கோடியில் மணிக்கூண்டு மற்றும் ராஜப்பா பூங்கா சீரமைக்கப்படுகிறது. ஆதலால் கடைகளை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக சாலையோரத்தில் தகரத்தினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.904 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 22 விதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சிவகங்கை பூங்கா சீரமைப்பு, பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம், காமராஜர் மார்க்கெட், சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவை சீரமைக்கப்படுகின்றன.

மேலும் அகழி சுத்தப்படுத்தப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டு படகு விடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் மேம்பாட்டு பணிகள், பல்வேறு பூங்காக்கள் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராஜப்பா பூங்கா

இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜப்பா பூங்காவும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இதனை ராணிஸ் டவர் என்றும் அழைப்பது உண்டு. மணிக்கூண்டு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டு 1883-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மகாராணி முடி சூட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது என்றும், மணிக்கூண்டை கட்ட தஞ்சை நகராட்சிக்கு மராட்டிய ராணி நிதி கொடுத்ததால் ராணிஸ் டவர் என்று அழைக்கப்படுவதாகவும் சிலர் கூறுவர். இந்த பூங்கா 3 ஆயிரத்து 284 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் மணிக்கூண்டு 185 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சென்றனர். இந்த பூங்காவில் மாநகராட்சி மண்டல அலுவலகம், விரிவசூல் மையம், போக்குவரத்து போலீஸ் அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டது.

130 அடி உயர மணிக்கூண்டு

மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் காட்சி அளிக்கிறது. 20 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டின் அடிப்பகுதி சதுரவடிவில் உள்ளது. 4 புறமும் வாயில்கள் உள்ளன. அதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு அறுகோண வடிவிலும், அதன் மேல் 40 அடிக்கு சதுர வடிவிலும், அதற்கு மேல் 10 அடி உயரத்துக்கு பெரியகோவில் கோவில் கோபுரம் போன்றும் இருக்கும். மணிக்கூண்டு கட்டிடத்தில் முதலாம் உலகப்போரில் தஞ்சையில் இருந்து கலந்து கொண்ட 61 பேரில் 4 பேர் வீர மரணம் அடைந்தனர் என்ற செய்தி அடங்கிய பளிங்கு கல்லும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் 100 படிகளுக்கு மேல் உள்ளது. கட்டிடத்தில் அழகிய மரவேலைப்பாடுகளும், பளிங்கு கற்களுக்கு மத்தியில் ஒரு ெகடிகாரமும் இருந்தது. இந்த ெகடிகாரம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். இதன் மணியோசை கிட்டத்தட்ட 3 மைல் தூரத்திற்கு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் இந்த மணிக்கூண்டு செயல்படவில்லை.

ரூ.4 கோடியில் பணிகள்

தறபோது ரூ.4 கோடி செலவில் ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு சீரமைக்கப்பட உள்ளது. இதில் பூங்காவை புதுப்பொலிவாக்கி, இருக்கைகள், விளக்குகள் அமைத்து, மணிக்கூண்டை புதுப்பொலிவு பெற செய்து ஓசை எழுப்பும் வகையில் தயார் செய்வதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக தற்போது இந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு விட்டது. தற்போது அந்த கடைகள் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கடைகள் இருக்கும் பகுதி முக்கிய சாலையில் இருப்பதால் அந்த வழியாக செல்வோருக்கு பாதிப்பு எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காக சுற்றிலும் தகரத்தினால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. பூங்காவையொட்டி உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் நடைபாதை, செடிகள் வைக்கப்படுகின்றன. சுற்றுச் சுவரும் அமைக்கப்படுகிறது’’என்றார்.

Next Story