தேனி கலெக்டர் அலுவலகம் அருகில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தேனி,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லிம்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக முஸ்லிம்கள் அமைப்புகள் அறிவித்தன. அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று காலையில் திரண்டனர். கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சாலையில் திரண்டு நின்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு உலமா சபை மாவட்ட தலைவர் சையது இஸ்மாயில் தலைமை தாங்கினார். செயலாளர் நிஜாமுதீன் வரவேற்றார். இதில் தி.மு.க. நகர பொறுப்பாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர தலைவர் முனியாண்டி, அ.ம.மு.க. நகர செயலாளர் காசிமாயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜப்பன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழ்ப்புலிகள், பெண்கள் விடுதலை கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story