கொக்கிலமேடு ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் 42 பேரின் பெயர்கள் நீக்கம் - தேர்தல் பிரிவு அதிகாரியிடம் புகார்


கொக்கிலமேடு ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் 42 பேரின் பெயர்கள் நீக்கம் - தேர்தல் பிரிவு அதிகாரியிடம் புகார்
x
தினத்தந்தி 20 Feb 2020 3:30 AM IST (Updated: 19 Feb 2020 10:36 PM IST)
t-max-icont-min-icon

கொக்கிலமேடு ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் உயிரோடு உள்ளவர்களின் 42 பெயர்கள் நீக்கப்பட்டு, இறந்தவர்களின் பெயர்களுடன் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் திருக்கழுக்குன்றம் தேர்தல் பிரிவு அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு ஊராட்சியில் மொத்தம் 1,067 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொக்கிலமேடு ஊராட்சியில் உள்ள கிராமப்பகுதி, அம்பேத்கர் நகர், மீனவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கலின்போது அந்த பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு ஏற்கனவே பட்டியலில் இருந்த 42 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் அந்த பெயர்கள் அப்படியே பட்டியலில் உள்ளது போல் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சரி பார்த்தபோது தங்கள் பெயர்கள் நீக்கப்பட்ட 42 வாக்காளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த 42 வாக்காளர்களும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி தெய்வநாயகிகோதண்டராமன் தலைமையில் கும்பலாக சென்று திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள கொக்கிலமேடு ஊராட்சி வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் அடைந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் அப்படியே பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், மெத்தனப்போக்குடன் செயல்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீக்கப்பட்ட தங்கள் பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் 42 வாக்காளர்களும் கையெழுத்திட்டு கூறி உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் குளறுபடி பணிகளை மேற்கொண்ட வருவாய்த்துறை மற்றும் ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பாதிக்கப்பட்ட 42 வாக்காளர்களும் தனித்தனியாக மனு அனுப்பி உள்ளனர்.

Next Story