தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர், ரெயில் மோதி சாவு செல்போனில் பாட்டுகேட்டு கொண்டே சென்றதால் விபரீதம்
செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே கல்லூரி மாணவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்.
சென்னை,
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மிதுன் (வயது 18). இவர் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக மிதுன் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் தனது செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே அங்கு இருந்த ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த சமயத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஆர்வமாக பாட்டுக்கேட்டுக்கொண்டே மிதுன் வந்ததால், ரெயில் வருவதை அவர் கவனிக்கவில்லை.
காலதாமதமாக ரெயில் சென்றது
இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ரெயில் மோதியதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்தில் இறந்து கிடந்த மாணவன் மிதுன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக அரைமணி நேரம் காலதாமதமாக கோயம்புத்தூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story