குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலம் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலம் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:15 AM IST (Updated: 19 Feb 2020 11:01 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், அந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஜமாத்துல் உலமா சபை தலைவர் கமருத்தின் பாக்கவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்துல் சமது முன்னிலை வகித்தார். ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் தேசியக்கொடிகளை ஏந்தியபடி சென்றனர். அப்போது நாங்கள் இந்தியாவில் குடியிருந்து வருகிறோம், மதங்களின் அடிப்படையில் மக்களை பிரிக்கக்கூடாது மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. ஏ.டி.சி. பகுதியில் இருந்து தொடங்கி மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, கே‌ஷினோ சந்திப்பு வழியாக வென்லாக் சாலையில் ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது.

கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலம் அருகே முஸ்லிம்கள் கூடி பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். அப்பகுதியில் நிர்வாகிகள் பேசியதுடன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஊட்டி நகர ஐக்கிய ஜமாத், குன்னூர் இஸ்லாமிய கூட்டமைப்பு, கோத்தகிரி அனைத்து ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நிர்வாகிகள் 7 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த மனுவில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு போன்ற சட்டங்கள் இஸ்லாமியர் மட்டுமின்றி, அனைத்து இந்தியர்களையும் பாதிக்கும் என்பதால், இவைகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊர்வலத்தையொட்டி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டும், போராட்டத்தை கண்காணிக்கும் சி.ஏ.ஏ. சிறப்பு அதிகாரி சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story