செஞ்சிலுவை சங்க இருசக்கர வாகன தொடர் ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


செஞ்சிலுவை சங்க இருசக்கர வாகன தொடர் ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 20 Feb 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சிலுவை சங்க இருசக்கர வாகன தொடர் ஊர்வலத்தை தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

இந்திய செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை கடந்த மாதம் சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே செஞ்சிலுவை சங்கத்தின் கொள்கைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஊர்வலம் கடந்த 6-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. அடுத்த மாதம்(மார்ச்) 14-ந் தேதி சென்னை சென்றடையும் இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை தஞ்சை வந்தடைந்தது. நேற்று காலை தஞ்சை சரபோஜி கல்லூரி வளாகத்தில் இருந்து மீண்டு்ம் தொடங்கியது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஊர்வலத்தை கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. வேலுமணி, முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிரு‌‌ஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், சரபோஜி கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் ஊர்வல ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள், செஞ்சிலுவை சங்க துணை கிளை உறுப்பினர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி-கல்லூரி மாணவர்கள்

இந்த ஊர்வலம் செல்லும் வழியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஜூனியர் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் நின்று கொடியசைத்து ஊர்வலத்தில் சென்றவர்களை ஊக்கப்படுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. பின்னர் ஊர்வலம் பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம், அம்மாப்பேட்டை வழியாக திருவாரூர் மாவட்டத்தை சென்றடைந்தது.

Next Story