ராணுவத்தில் பெண்களின் உடல் திறன் குறித்து கேள்வி எழுப்புவது மத்திய அரசின் பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது சிவசேனா தாக்கு


ராணுவத்தில் பெண்களின் உடல் திறன் குறித்து கேள்வி எழுப்புவது   மத்திய அரசின் பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது   சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 19 Feb 2020 10:52 PM GMT (Updated: 19 Feb 2020 10:52 PM GMT)

ராணுவத்தில் பெண்களின் உடல் திறன் குறித்து கேள்வி எழுப்புவது மத்திய அரசின் பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை, 

பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு முடிவு கட்டி ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ள சிவசேனா, இது பெண்கள் சக்தியின் வெற்றி என்று தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

துணிச்சல், தியாகம் என்று வரும் போது பாலின சார்பு இருக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் பெண்களின் உடல் திறன் மற்றும் மனவலிமை குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்போக்கு மனநிலை

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு அதன் பிற்போக்கு மனநிலையை காட்டுகிறது. மேலும் அது பெண்களை அவமதிப்பதாகும்.

ஜான்சி ராணி லட்சுமிபாய், மகாராணி தாராபாய், கித்தூர் ராணிசென்னம்மா, அகில்யாபாய் ஹோல்கர் போன்ற பெண்கள் போர்க்களத்தில் முன்மாதிரியான தைரியத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்தினர்.

இந்திய தேசிய ராணுவத்தின் கேப்டனாக இருந்த லட்சுமி சேகலை யார் தான் மறக்க முடியும். எனவே மத்திய அரசு தனது அணுகுமுறையையும், பார்வையையும் மாற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மத்திய அரசின் மன கட்டமைப்பில் சிக்கல் இருப்பதை காட்டுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story