கஞ்சா விற்ற 6 பேர் கைது


கஞ்சா விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 20 Feb 2020 1:40 PM GMT)

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி வழிகாட்டுதலின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தங்ககுருநாதன், சுந்தரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த வைதீஸ்வரி என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பார்த்தீபன், ஏழுமலை, அப்பாஸ், பாக்கியம், செல்வி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் நேற்று வரை கஞ்சா மற்றும் சாராய விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சாராயம் மற்றும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழித்திட தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story