ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது
நாகர்கோவிலில் நடைபெற்ற சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் தோட்டங்களில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2016 டிசம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சம்பள உயர்வு வழங்க கோரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 17-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்து சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை 18-ந் தேதி நடந்தது. ஆனால் அப்போது ரப்பர் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாக ரப்பர் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதையொட்டி நேற்று காலை சம்பள உயர்வு தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கோணத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முகமது அப்துல் சுபைதர் தலைமை தாங்கினார். அரசு ரப்பர் கழக அதிகாரிகள் மற்றும் குமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் வல்சகுமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி கூறினார்கள்.
அதாவது அரசு அறிவித்துள்ள இடைக்கால ஊதிய உயர்வு 23 ரூபாயுடன் 17 ரூபாய் கூடுதலாக சேர்த்து மொத்தம் 40 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக அரசு ரப்பர் கழக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதை தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்தனர். சம்பள உயர்வு உடனே வழங்க வேண்டும் என்றும், அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் கூறினார்கள். இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. எனவே வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.
Related Tags :
Next Story