தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு மீனவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இரவில் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 6 குட்டி கப்பல்களில் 50-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் ராமேசுவரம் மீனவர்கள் வேறு இடத்துக்கு மீன்பிடிக்கச் செல்ல முயன்றனர். ஆனால் அந்த குட்டிக் கப்பல்களில் இருந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் ராமேசுவரம் படகுகளில் இருந்த மீனவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். உடனே மீனவர்கள் அலறினார்கள். ஆனாலும் தொடர்ச்சியாக சற்று நேரம் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான படகினை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. படகில் பொருத்தி இருந்த கண்ணாடி நொறுங்கி சிதறியது. அந்த படகில் இருந்த மீனவர் சேசு அலங்காரம் (வயது 52) என்பவரின் வலது கண்ணில் கண்ணாடி சிதறல்கள் பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் அவர் துடித்ததுடன், தனக்கு கண் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதைதொடர்ந்து அந்த படகில் இருந்த படகு உரிமையாளர் கிங்ஸ்டன், மீனவர்கள் மெக்கான்ஸ் (32), பெரித்ராஜ் (34), மாரி (42), முருகன் (40) ஆகியோர் உடனடியாக சேசு அலங்காரத்தை கரைக்கு கொண்டு வந்து ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் சேதம் அடைந்த படகை பார்வையிட்டனர்.
இதுகுறித்து அந்த படகில் இருந்த மற்ற மீனவர்கள் கூறுகையில் “ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எந்தவொரு எச்சரிக்கையும் செய்யாமல் எங்களது படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுடுவதை கண்டதும் பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தோம்” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறும்போது, “கடந்த 2016-ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் இறந்து போனார். அதன் பின்னர் எவ்வித துப்பாக்கி சூடும் அவர்கள் நடத்தவில்லை. தற்போது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story