போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்கு


போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:17 PM GMT (Updated: 20 Feb 2020 10:17 PM GMT)

சேலம் தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்த மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சேலம்,

சேலம் 4 ரோடு காமராஜர் காலனி பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் தெய்வமணி சேலம் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கி வருகிறோம். இதில் வாடிக்கையாளர்கள் சிலர் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்று உள்ளனர். அவ்வாறு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை போலி நகைகளை கொடுத்து மொத்தம் ரூ.94 லட்சம் மோசடி நடந்து உள்ளது.

வழக்குப்பதிவு

இதற்கு எங்கள் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் உடந்தையாக இருந்து உள்ளார். எனவே போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட கமி‌‌ஷனர் செந்தில்குமார், நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி, வங்கி நகை மதிப்பீட்டாளர் சக்திவேல் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட மொத்தம் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story