குடியுரிமை திருத்த சட்டத்தை புதைத்துவிட வேண்டும் - மதுரை போராட்டத்தில் வைகோ பேச்சு


குடியுரிமை திருத்த சட்டத்தை புதைத்துவிட வேண்டும் - மதுரை போராட்டத்தில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 4:30 AM IST (Updated: 21 Feb 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை அடியோடு புதைத்துவிட வேண்டும் என்று மதுரை போராட்டத்தில் வைகோ பேசினார்.

மதுரை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து மதுரையில் கடந்த 14-ந்தேதி இரவில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அன்றைய தினம் மதுரை மகபூப்பாளையம் பகுதியிலும் போராட்டம் நடந்தது. அங்கு அன்று தொடங்கிய தொடர் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முஸ்லிம்களின் கட்டுப்பாடு என்ன என்பதை இங்கு வந்துதான் பார்க்க வேண்டும். பெண்கள் அறவழியில் போராட்டம் நடத்துகிறார்கள். காந்தியின் கனவை நினைவாக்கிய மக்கள் நீங்கள்தான். குடியுரிமை திருத்த சட்டம் என்பது நமது குடியை கெடுக்கும் சட்டம். அதை அடியோடு நாம் புதைத்துவிட வேண்டும். அதற்காக இந்த போராட்டம் நடந்து வருகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்து கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம் சகோதரிகள் இங்கு வந்து 7 நாட்களாக போராடுகிறார்கள். கண்ணகி போராடிய மதுரை மண்ணில் இருந்து முஸ்லிம் பெண்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

முன்னதாக அவர் மதுரையில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2 கோடி பேரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளன. பா.ஜ.க.விற்கு எதிராக நாடு முழுவதும் மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் இந்தியாவை ஆக்கிரமித்து விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்து அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசு விரும்பாது.

எனவே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும். இதற்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் நிறைவேற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது. தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். எனவே தஞ்சை விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும். அந்த திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த வேண்டும். மத்திய அரசை கண்டிக்காவிட்டால் தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாக்கி விடுவார்கள். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் கவர்னர் நல்ல முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

இதற்கிடையே மதுரை நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசலில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் 4-வது நாளாக நடந்தது.

இதில் பங்கேற்றவர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் தளபதி மனைவி மேகலா நேரில் சென்று மதிய உணவு வழங்கினார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் ஹக்கீம், அபுதாகீர், பாலு, நேசனல் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Next Story