குலசேகரம் அருகே துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு


குலசேகரம் அருகே துணிகரம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 4:33 AM IST (Updated: 21 Feb 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குலசேகரம்,

குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி சுஜா (வயது 45). இவர்களுடைய மகள் சென்னையில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் விடுமுறையில் ஊர் திரும்பினார்.

இந்தநிலையில் விடுமுறை முடிந்து அவர் மீண்டும் சென்னை செல்ல புறப்பட்டார். இதற்காக நேற்று சுஜா, தனது ஸ்கூட்டரில் மகளை பஸ் ஏற்றி வழியனுப்புவதற்காக நாகர்கோவில் நோக்கி அழைத்து வந்தார். பின்னர் அவரை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

நகை பறிப்பு

பின்னர் சுஜா மீண்டும் ஸ்கூட்டரில் வீடு நோக்கி புறப்பட்டார். இரவு 9 மணியளவில் அண்டூர் சந்திப்பில் இருந்து மலைவிளை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி ஒரு வாலிபர் வந்து கொண்டிருந்தார். அடர்ந்த ரப்பர் தோட்டம் இருந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாத இடத்தில் சென்ற போது திடீரென அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை ஸ்கூட்டர் மீது மோத செய்தார்.

இதில் நிலைதடுமாறிய சுஜா ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார். இதை எதிர்பார்த்த அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

வலைவீச்சு

இதுகுறித்து சுஜா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குலசேகரம் பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகைப்பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்குள் ஒளிர செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story