மரக்கிளையை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மங்கலம் அருகே மரத்தின் கிளையை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மங்கலம்,
மங்கலம் அருகே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் மற்றும் வேப்பமரம், அரசமரம் உள்ளன.
ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் இந்த மரங்களில் நிழலில் அமர்ந்து காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள், ஆலமரத்தின் 10-க்கும் மேற்பட்ட கிளைகளை வெட்டி சரக்கு வாகனம் மூலம் கடத்தியுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறும்போது “ காளிபாளையத்தில் ஆலமரத்தின் 10-க்கும் மேற்பட்ட கிளைகளை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் மனு கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி ஜெகநாதனிடம் மனு கொடுத்து விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story