திருக்கோவிலூரில் நள்ளிரவில் துணிகரம்: மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை


திருக்கோவிலூரில் நள்ளிரவில் துணிகரம்: மின்வாரிய அதிகாரி வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Feb 2020 3:45 AM IST (Updated: 22 Feb 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலைரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

தனது மனைவி ராஜராஜேஸ்வரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து வீட்டை பூட்டி விட்டு அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கார்த்திகேயன் அழைத்து சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.

கார்த்திகேயன் வீட்டின் பின் பகுதியில் அவரது உறவினர்களான அரகண்டநல்லூரை சேர்ந்த சுப்புலட்சுமி, அபிநயா ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்த அபிநயா கதவை திறக்க முயன்றபோது கதவின் வெளிப்பகுதியில் தாழ்ப்பாழ் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் கூச்சல் எழுப்பி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து கதவை திறந்தனர். அதன் பிறகே அபிநயா, சுப்புலட்சுமி இருவரும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் கார்த்திகேயனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

கார்த்திகேயன் வீட்டில் இல்லாததை அறிந்து நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சத்தம் கேட்டு யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கார்த்திகேயனின் வீட்டின் பின்புறம் உள்ள அபிநயா, சுப்புலட்சுமி ஆகியோர் வசித்து வந்த வீட்டின் கதவில் வெளிப்புறம் தாழ்ப்பாழ் போட்டுள்ளனர். கொள்ளைபோன நகை, பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து உடனடியாக சென்னையில் இருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணாபாலன், உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் கொள்ளை தொடர்பாக அபிநயா, சுப்புலட்சுமி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றில் இருந்த ரேகைகளை பதிவுசெய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருக்கோவிலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story