உடுமலையில் திறந்தவெளியில் குப்பை கொட்டிய 4 கடைக்காரர்களுக்கு அபராதம் - சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை


உடுமலையில் திறந்தவெளியில் குப்பை கொட்டிய 4 கடைக்காரர்களுக்கு அபராதம் - சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2020 11:00 PM GMT (Updated: 21 Feb 2020 7:46 PM GMT)

உடுமலையில் திறந்த வெளியில் குப்பைகளைக்கொட்டிய 4 கடைக்காரர்களுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் அபராதம் விதித்தார்.

உடுமலை,

உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 17 ஆயிரத்து 526 வீடுகளும்,3 ஆயிரத்து 68 கடைகளும் உள்ளன.இதுதவிர நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் ஆகியவையும் உள்ளன.சுகாதாரப்பணிகளுக்காக உடுமலை நகராட்சியில் 94 நிரந்தர துப்புரவுத்தொழிலாளர்களும், 221 ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களும் என மொத்தம் 315 பேர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சி பகுதியில் எந்த இடத்திலும் குப்பைத்தொட்டிகள் இல்லை. ஏற்கனவே இருந்த குப்பைத்தொட்டிகளும் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விட்டன.

குப்பைகளை திறந்த வெளியில் கொட்டக்கூடாது என்றும் வீடு,வீடாக குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்கவேண்டும் என்றும் அறிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர். அவர்களுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பல முறை அறிவுறுத்தியும் தொடர்ந்து குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம் நகராட்சி பகுதியில் மத்திய பஸ்நிலையம்,சரவணா வீதி, தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. அந்த குப்பைகளை யார் திறந்த வெளியில் கொட்டியது என்று கண்டறியப்பட்டது.

இதையொட்டி 2 கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 வீதமும்,2 கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த கடைக்காரர்கள் அபராத தொகையை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறும்போது குப்பைகள் திறந்த‌வெளியில் கொட்டப்படுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story