நாகையில் இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா விழிப்புணர்வு ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


நாகையில் இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா விழிப்புணர்வு ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Feb 2020 11:07 PM GMT (Updated: 21 Feb 2020 11:07 PM GMT)

நாகையில் இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா விழிப்புணர்வு ரதத்தை கலெக்டர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

இந்திய செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழா விழிப்புணர்வு ரதம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி தூத்துக்குடியில் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு ரதம் தஞ்சை, திருவாரூர் வழியாக நேற்று நாகை அவுரித்திடலை வந்தடைந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இலக்குவன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ரதத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய செஞ்சிலுவை இயக்கம் தன்னலம் பார்க்காமல் தொண்டு செய்ய உருவாக்கப்பட்டது. எந்த நாட்டில் தன்னார்வ அமைப்பு அதிகம் வளர்ந்துள்ளதோ அந்த நாடு ஜனநாயகத்தில் தலைதோங்கியுள்ளது என்று அர்த்தம். நம்மை விட ஏழ்மையாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். மரம், செடி, கொடி என்று எந்த உயிரினமாக இருந்தாலும் நேசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் நாகை மாவட்ட துணைச் செயலாளர் மல்லிகா நன்றி கூறினார்.

Next Story