ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், அ.தி.மு.க. சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் 7 அமைச்சர்கள் பங்கேற்பு


ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில், அ.தி.மு.க. சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் 7 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Feb 2020 5:10 AM IST (Updated: 22 Feb 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 122 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கில் காலை 9.30 மணிக்கு திருமண விழா நடை பெற்றது.

இந்த திருமண விழாவிற்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. துணை ஒருங் கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மணவிழாவிற்கு முன்னதாக மணமக்களுக்கு பட்டுவேட்டி மற்றும் பட்டுசேலை வழங்கப்பட்டது. இதனை அணிந்து கொண்டு மணக்கோலத்தில் விழா அரங்கிற்கு வந்த 122 ஜோடிகளும் ஒரே மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். மணமக்களுக்கான தங்கத்தாலி மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மணமக்களுக்கு மலர்மாலை வழங்கப்பட்டு மாலை மாற்றிக் கொண்டனர். அதன்பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் மணமகள்கள் கழுத்தில் மணமகன்கள் தாலியினை கட்டினர்.

திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காமாட்சிவிளக்கு, குங்குமச்சிமிழ், பித்தளை குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, பால் குக்கர், ரைஸ் குக்கர், இட்லி குக்கர், ஹாட்பாக்ஸ் மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசை பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோ.கோபால் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, எம்.எல்.ஏ.க்கள் சேகர் (பட்டுக்கோட்டை), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி), முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள் பொன்வாசுகிராம், ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திருவாரூர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி.அன்பழகன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், குடவாசல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.ஆர்.தென்கோவன், குடவாசல் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எம்.ஆர்.அரசன்கோவன், சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா மனோகரன், ஆதிரெங்கம் கூட்டுறவு சங்க தலைவர் பி.எஸ்.மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எல்.எம்.முகமது அஷரப் வரவேற்றார். முடிவில் திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி நன்றி கூறினார். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Next Story