குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2020 5:30 AM IST (Updated: 22 Feb 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் நடந்து வருகிறது.

ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்பினர், அரசியல் கட்சியினர் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று தமிழக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

2-வது நாளாக போராட்டம்

அதேபோல் ஈரோட்டிலும் முஸ்லிம்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்து திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். ஈரோடு செல்லபாட்ஷா வீதியில் பெண்கள் உள்பட முஸ்லிம்கள் பலர் திரண்டனர். அவர்கள் அங்கேயே வீதியில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டம் இரவும் தொடர்ந்தது.

நள்ளிரவு வரை பெண்கள் சிலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன்பின்னர் அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் சென்று தங்கினர். விடிய விடிய போராட்டம் நடந்தது. பின்னர் நேற்று காலையில் 2-வது நாளாக வழக்கம்போல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடக்கும் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டது.

ஆதரவு

முஸ்லிம்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் கட்சியினர் போராட்டம் நடந்த பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், அயூப்அலி, மாவட்ட துணைத்தலைவர்கள் பாபு என்கிற வெங்கடாசலம், அம்மன் மாதேஸ், முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாஷா, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story