பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை


பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 8:07 PM GMT)

பட்டுக்கோட்டை பகுதியில் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் எந்திரங்கள் மூலம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை, விவசாயிகள் வயலில் இருந்தே டிராக்டரில் ஏற்றி அப்படியே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

வைக்கோல் விற்பனை

பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வைக்கோல் விற்பனையும் வயலிலேயே பெரும்பாலும் முடிந்து விடுகிறது. இந்த பகுதியில் வைக்கோலை கட்டுகளாக கட்டுவதற்கும் எந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வைக்கோல் கட்டு ஒன்று ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கரில் 30 முதல் 40 கட்டு வைக்கோல் கிடைக்கிறது.

விலை சரிவு

இந்த ஆண்டு சாகுபடி பரப்பு அதிகரித்து இருப்பதால் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.

பட்டுக்கோட்டை பகுதியில் தற்போதைய நிலவரப்படி ஒரு ஏக்கர் வயலில் கிடைக்கும் வைக்கோல் ரூ.800 முதல் ரூ.1000 வரையே விலை போவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டில் ஒரு ஏக்கர் வைக்கோல் விலை ரூ.2 ஆயிரமாக இருந்தது.

வெளி மாவட்ட வியாபாரிகள்

வெளி மாவட்ட வியாபாரிகள் லாரியுடன் வந்து வைக்கோலை வாங்கி செல்கிறார்கள். அறுவடை தொடர்ந்து நடைபெறும் நிலையில் வைக்கோல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ள தாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Next Story