சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம்: ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தளவாய்சுந்தரம் பேச்சுவார்த்தை


சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம்: ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தளவாய்சுந்தரம் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Feb 2020 5:30 AM IST (Updated: 24 Feb 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தோவாளையில் தளவாய்சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் கீரிப்பாறை, மணலோடை, சிற்றாறு, கோதையாறு ஆகிய 4 கோட்டங்களும், 9 பிரிவுகளும், கீரிப்பாறையில் ஒரு தொழிற் கூடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது மொத்தம் 1,950 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தக்கோரி கடந்த 17-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் நிஹார் ரஞ்சன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண் தங்கம் கலந்து கொண்டனர்.

நிர்வாகம் விளக்கம்

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மகேந்திரன், சுகுமாரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் இளங்கோ, விஜயன், ஐ.என்.டி.யூ.சி சார்பில் அனந்தகிருஷ்ணன், சோனியா-ராகுல் தொழிற்சங்கம் சார்பில் குமரன், சி.ஐ.டி.யூ. சார்பில் வல்சகுமார், பி.எம்.எஸ். சார்பில் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது நிர்வாகம் தரப்பில் ஓர் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், அரசு ரப்பர் கழகத்தில் கிடைக்கும் வருமானத்தில் 65 சதவீத ஊதியம், மற்றும் இதர பலன்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரப்பர் உற்பத்தி குறைந்தது மட்டுமல்லாமல், விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையிலும் அடிப்படை சம்பளத்தில் ரூ.23 உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர ஒவ்வொரு வருடமும் 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.

எனவே வருங்காலங்களில் உற்பத்தியை பெருக்கி லாபம் ஈட்டும் பட்சத்தில் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும். எனவே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் ரப்பர் லோடுவை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இதில் ரப்பர் லோடு செல்ல தடுப்பதை மட்டும் அனுமதிப்பதாக கூறிய தொழிற் சங்கத்தினர், ஊதிய உயர்வு பற்றிய விளக்கங்களை ஏற்க மறுத்து விட்டனர்.

தளவாய்சுந்தரம்

மேலும் இதுகுறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறுகையில், தொழிற்சங்கங்களின் இதர கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு நிர்வாக இயக்குனர் பரிசீலித்து மார்ச் 15-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் தெரிவிப்பார்கள். ஊதிய உயர்வு பிரச்சினையை பொறுத்தமட்டில் முதல்- அமைச்சரிடம் எடுத்து கூறி தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், நாளை (அதாவது இன்று) மாலை 4 மணிக்கு கோணத்தில் தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறோம். கூட்டத்திற்கு பிறகு தான் வேலை நிறுத்தம் போராட்ட குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர். 

Next Story