குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூண்டுக்குள் அமர்ந்து நூதன போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூண்டுக்குள் அமர்ந்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:30 PM GMT (Updated: 23 Feb 2020 7:58 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூண்டுக்குள் அமர்ந்து இஸ்லாமியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யம்பேட்டை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி தர்வேஸ் தைக்கால் பகுதியில் இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பசுபதிகோவில், மாங்குடி, பண்டாரவாடை, பாபநாசம், அம்மாபள்ளி தைக்கால் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அப்போது வாலிபர்கள் சிலர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகதிகள் முகாம் போன்று கூண்டு அமைத்து அதற்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று 5-வது நாளாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பேரணி நடந்தது. எம்.எஸ்.எம். நகரில் இருந்து புறப்பட்ட பேரணி கிழக்கு கடற்கரை சாலை, முத்தம்மாள் தெரு, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நிறைவடைந்தது.

இதேபோல் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் ஜமாத் ஒருங்கிணைப்பு குழு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஜமாத் தலைவர் கமருதீன், செயலாளர் அசன்முகைதீன், காங்கிரஸ் வட்டார தலைவர் ஷேக்இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் நாகூர்கனி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

100 பேர் மீது வழக்கு

கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே குடி யுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்ததாக கூறி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story