மாமல்லபுரம் அருகே பரிதாபம்: ஷேர் ஆட்டோ-கார் மோதல்; ஒருவர் பலி மருமகன் உள்பட 2 பேர் படுகாயம்


மாமல்லபுரம் அருகே பரிதாபம்: ஷேர் ஆட்டோ-கார் மோதல்; ஒருவர் பலி மருமகன் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Feb 2020 4:30 AM IST (Updated: 25 Feb 2020 1:07 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே பேரூரில் கிழக்குக்கடற் கரைச்சாலை வழியாக சென்ற ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

மாமல்லபுரம்,

அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற மருமகன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). இவருக்கு யானைக்கால் நோய் இருந்ததால், அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது மருமகன் விக்னேஷ் (25) என்பவரின் வீட்டிற்கு வந்தார்.

பின்னர், செங்கல்பட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுப்பதற்காக சென்னை பெசன்ட்நகரில் இருந்து ஒரு ஷேர் ஆட்டோ மூலம் தனது மருமகனுடன் கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஷேர் ஆட்டோ மாமல்லபுரம் அருகே பேரூரில் உள்ள வளைவில் இடது பக்கமாக திரும்பும்போது, புதுச்சேரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பயணம் செய்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மேலும் ஆட்டோவில் உடன் பயணம் செய்த மருகன் விக்னேஷ்(25) மற்றும் ஆட்டோ டிரைவர் மோகன் ஆகியோர் பலத்த காயமடைந்தநிலையில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story