நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி


நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Feb 2020 10:30 PM GMT (Updated: 24 Feb 2020 8:44 PM GMT)

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

ஜெயலலிதா பிறந்தநாள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.

குழந்தைகளுக்கான உரிமைகள் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரே‌‌ஷ் (பொது), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், தனித்துணை கலெக்டர் ராஜன் (சமூக பாதுகாப்பு திட்டம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீச்சாங்குப்பம் பள்ளி

அதேபோல நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குணவதி, முருகானந்தம், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெண் சிசுக்கொலையை ஒழிக்க வேண்டும். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிய வந்தால் அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் எடுத்து கொண்டனர். இதில் திரளான மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story