விழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


விழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2020 10:56 PM GMT (Updated: 24 Feb 2020 10:56 PM GMT)

விழுப்புரத்தில் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை, கொடி உள்பட 14 வகையான பொருட்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அரசால் தடை விதிக்கப்பட்டு அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்த பிறகும் இன்னும் ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரின்பேரில் இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுவினர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க அதனை கண்காணித்து பறிமுதல் செய்வதோடு அதனை விற்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

அதிரடி சோதனை

இந்நிலையில் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ரெட்டியார் பஜார் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக நேற்று மாலை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ரமணன், புகழேந்தி, திண்ணாயிரமூர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் வில்லியம் ஆரோக்கியராஜ், அசோகன், கோபிநாத் ஆகியோர் ரெட்டியார் பஜார் பகுதிக்கு விரைந்து சென்று அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

அப்போது அங்கு 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, கைப்பை ஆகியவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்ததற்காக அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலவை எந்திரம் மூலம் அரைத்து சாலை பணிகளுக்கு மூலப்பொருளாகவோ அல்லது சிமெண்டு தொழிற்சாலைக்கோ அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

Next Story