நாராயணசாமி தலைமையிலான அரசு 252 அறிவிப்புகளில் ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


நாராயணசாமி தலைமையிலான அரசு 252 அறிவிப்புகளில் ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Feb 2020 11:44 PM GMT (Updated: 24 Feb 2020 11:44 PM GMT)

252 அறிவிப்புகளில் ஒன்றைக்கூட முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

புதுச்சேரி,

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா புதுவை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோகுலகிருஷ்ணன் எம்.பி., பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அ.தி.மு.க. கொடியேற்றி எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இலவச மிக்சி, கிரைண்டர், குக்கர், தையல் எந்திரம், லேப்டாப், இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அன்பழகன் எம்.எல்.ஏ.

விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று பேசிய ஜெயலலிதா அவ்வாறே வாழ்ந்து காட்டினார். இ்ந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். அவரது வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஏழைகளும், விவசாயிகளும் ஏற்றம் பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த புனித நாளில் புதுச்சேரியிலும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அனைவரும் உறுதியேற்போம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அவருக்கு சிலை வைப்பது உள்ளிட்ட எதையும் செய்யாத முதல்-அமைச்சர் நாராயணசாமி தன்னை சிறுமைப்படு்த்திக்கொண்டார். தவறான எண்ணம் கொண்ட முதல்-அமைச்சரின் செயல்பாட்டால் தான் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

252 அறிவிப்புகள்

ஒவ்வொரு அரசுக்கும் தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது கடமையாகும். ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, சட்ட மன்றத்தில் அறிவித்தது என எதனையும் நிறைவேற்றவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசியல் ரீதியில் மத்திய அரசுடனும், கவர்னருடனும் மோதல் போக்கினை கடைபிடித்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்து செய்யாதது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெறாதது, இலவச அரிசி வழங்காதது, லேப்டாப் வழங்காதது, முதியோர் உதவித்தொகையை உயர்த்தாதது, மின்கட்டணத்தை குறைக்காதது என சொன்ன எதையும் அவர் செய்யவில்லை. அவர்கள் 252 அறிவிப்புகள் கொடுத்தனர். ஆனால் எதையும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு செயல்படுத்தவில்லை.

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நடராஜன், ராஜாராமன், இணை செயலாளர் மகாதேவி, துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நாகமணி, மீனவர் அணி செயலாளர் ஞானவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்துவான்சூசை, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி,உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், முன்னாள் தொகுதி செயலாளர் அன்பழகன் உடையார், தொகுதி செயலாளர்கள் பொன்னுசாமி, கலியபெருமாள், கிருஷ்ணமூர்த்தி, ராஜாமணி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் ஜெய.சேரன், திருபுவனை காந்தி, மணவெளி குமுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story