போர்வெல் பழுதுபார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்


போர்வெல் பழுதுபார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி;  2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 25 Feb 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்பூர், 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அறிவேல். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு (போர்வெல்) பழுதாகி இருந்தது. அதனை சரி நரியம்பட்டை சேர்ந்த மத்தேயு (வயது 40) என்ற தொழிலாளி போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் கொண்டு வந்துள்ளார். அவருடன் அவரது மகன் சஞ்சய் (21) மற்றும் பணியாளர் சந்தோஷ் (17) ஆகிய 2 பேரும் வந்தனர்.

அங்கு போர்வெல் பழுதுபார்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விவசாய நிலத்தில் மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பி மீது போர்வெல் வாகனம் உரசியதில் வாகனத்தின் மேல் மின்சாரம் பாய்ந்தது.

இதில் மின்சாரம் தாக்கி மத்தேயு (வயது 40) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சஞ்சய் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மின்சாரம் தாக்கியதில் போர்வெல் பழுதுபார்க்கும் வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அங்கிருந்த அனைவரும் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மத்தேயு உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தணர். மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போர்வெல் பழுதுபார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story