முதுமலையில் கடும் வறட்சி: வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடக்கம்
முதுமலையில் கடும் வறட்சி வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணியை வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டு உள்ளது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பக வனப்பகுதி நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை வறண்டு காணப்படும். தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு செடி, கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன. தற்போது காட்டுத்தீ பரவும் அபாயமும் நிலவி வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி காய்ந்து விட்டன. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதன்காரணமாக வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி அலைந்து திரிந்து வருகின்றன. குறிப்பாக யானை, புலிகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. எனவே வனவிலங்குகளில் தாகத்தை தீர்க்க புலிகள் காப்பக வனத்துறை சார்பில் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றப்பட்டது. சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வந்து தண்ணீரை குடித்துச்சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது:- கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
இதனால் வனப்பகுதிகளில் வசித்து வரும் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணியில் தற்போது தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்தப்பணி 2 மாதம் நடைபெறும். குறிப்பாக தினமும் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்படும்.
மேலும் தினமும் கண்காணிக்கப்படும். இதில் தண்ணீர் இல்லாத தொட்டிகளில் தண்ணீர் ஊற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story