இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளர் கைது


இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 12:15 AM GMT)

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

பெருந்துறை தாலுகா வீரசங்கிலி அருகே உள்ள குட்டப்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவியின் தாத்தா முத்துசாமிகவுண்டர் கடந்த 1988-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதற்கான இறப்பு சான்றிதழை உறவினர்கள் வாங்கவில்லை. இந்தநிலையில் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டதால் சத்தியமூர்த்தி வருவாய் துறை அதிகாரிகளை அணுகினார்.

இதற்கான விண்ணப்பம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இறப்பு சான்றிதழை வழங்க வேண்டுமென்றால், ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று, சத்தியமூர்த்தியிடம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக ஏ1 உதவியாளர் கணேசன் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்தியமூர்த்தி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட சத்தியமூர்த்தி, ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார்.

அங்கு கணேசனிடம் சத்தியமூர்த்தி ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கையும், களவுமாக பிடித்தனர். அதைத்தொடர்ந்து அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு கணேசனை போலீசார் கைது செய்தார்கள். ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story