வங்கதேசத்தை சேர்ந்தவர் எனக்கூறி வாலிபரை துன்புறுத்திய நவநிர்மாண் சேனாவினர் 8 பேர் மீது வழக்கு புனே போலீசார் நடவடிக்கை
புனேயில், வங்கதேசத்தை சேர்ந்தவர் என வாலிபரை துன்புறுத்திய நவநிர்மாண் சேனா கட்சியினர் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் கடந்த 9-ந் தேதி மும்பையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை புனே சகாகர் நகர் பாலாஜி நகரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசில் அக்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
8 பேர் மீது வழக்குப்பதிவு
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்களான அவர்கள், புனேயில் பிழைப்புக்காக தங்கியிருந்ததும் தெரியவந்தது.
முன்னதாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரான ரோஷன் சேக்(வயது35) என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் எனக்கூறி நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரை துன்புறுத்தி உள்ளனர். அப்போது, அவர் தான் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க அனைத்து ஆவணங்களையும் காட்டினார். ஆனால் அதனை ஏற்க மறுத்து நவநிமாண் சேனாவினர் ரோஷன் சேக்கை துன்புறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நவநிர்மாண் சேனாவினர் மீது ரோஷன் சேக் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்த கட்சியை சேர்ந்த 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story