தொடர் போராட்டம் நடத்திய புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் அதிரடியாக வெளியேற்றம் 150 மாணவர்கள் சிறை வைப்பு


தொடர் போராட்டம் நடத்திய புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் அதிரடியாக வெளியேற்றம் 150 மாணவர்கள் சிறை வைப்பு
x
தினத்தந்தி 26 Feb 2020 5:19 AM IST (Updated: 26 Feb 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி வருகையையொட்டி தொடர் போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் அதிரடியாக வெளியேற்றினர். இதன்பிறகு போராட்டம் நடத்திய 150 மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக அரங்கில் சிறை வைக்கப்பட்டனர்.

காலாப்பட்டு,

புதுவை காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 20 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒரு அணியினர் என திட்டம் வகுத்து போராடினர்.

அங்கேயே சமைத்து சாப்பிட்டு தூங்கினார்கள். இதனால் பல்கலைக்கழக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

துணை ஜனாதிபதி வருகை

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார்.

இதையொட்டி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாணவர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

இதையடுத்து மத்திய போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டு மாணவர்களை எச்சரிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

குண்டுக்கட்டாக வெளியேற்றம்

இந்தநிலையில் நேற்று காலை அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டார்கள். பின்னர் போலீஸ் அதிகாரிகள், மாணவர்களை கலைந்து போகும்படி எச்சரித்தனர். ஆனால் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 65 மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

150 மாணவர்கள் சிறை வைப்பு

இதை அறிந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக வெள்ளிவிழா அரங்கம் முன்பு நேற்று மாலை ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகிகள், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகுமாறு அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து, வெள்ளி விழா அரங்கில் அடைத்து, சிறை வைத்தனர்.

பட்டமளிப்பு விழா முடியும் வரை அவர்களை அரங்கில் அடைத்து வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு

இன்று(புதன்கிழமை) துணை ஜனாதிபதி வரும்போது மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பல் கலைக்கழகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story