ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் பணமோசடி செய்த தந்தை, மகன், மகள் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக   12 பேரிடம் பணமோசடி செய்த தந்தை, மகன், மகள் கைது
x
தினத்தந்தி 25 Feb 2020 11:59 PM GMT (Updated: 25 Feb 2020 11:59 PM GMT)

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் பணமோசடி செய்த தந்தை, மகன், மகளை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் நரசிம்மா. இவர் சம்பவத்தன்று காட்கோபரில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருந்தபோது, புபேந்திரா ராவல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதில், தனக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரிகள் தெரிந்தவர்கள் இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய நரசிம்மா தனக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி தரும்படி கூறினார். ரூ.8 லட்சம் தந்தால் வேலையில் சேர்த்து விடுவதாக புபேந்திரா ராவல் அவரிடம் தெரிவித்தார்.

இதனால் நரசிம்மா தனது மற்றொரு நண்பரான பட்டேல் உள்பட 6 பேருக்கு வேலை கேட்டு அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பணத்தை கொடுத்து உள்ளார். புபேந்திரா ராவல் மற்றும் அவரது மகன் குணால், மகள் ரிங்கால் ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் சில நாட்கள் கழித்து 6 பேருக்கும் ரெயில்வேயில் வேலை கிடைத்து இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை செய்ய வரும்படியும் கூறி அதற்கான நியமன ஆணையை கொடுத்தனர். இதனை பெற்ற அவர்கள், அங்கு சென்று விசாரித்தபோது, அந்த நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் இதே பாணியில் மொத்தம் 12 பேரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடிவந்தனர்.

இந்தநிலையில் காட்கோபருக்கு வந்த புபேந்திரா ராவல், மகன் குணால், மகள் ரிங்கால் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story