சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா போராட்டம்


சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து    பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2020 12:14 AM GMT (Updated: 26 Feb 2020 12:14 AM GMT)

சிவசேனா கூட்டணி அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடந்தது. மும்பையில் நடந்த போராட்டத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் தலைமை தாங்கினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தது.

இந்தநிலையில் சிவசேனா கூட்டணி அரசு, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாக கூறி நேற்று மும்பை, தானே உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. விவசாயிகள் பிரச்சினை, மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை நிறுத்தியது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாநில அரசை கண்டித்து பாரதீய ஜனதா இந்த போராட்டத்தை நடத்தியது.

கோஷம்

மும்பை ஆசாத் மைதானத்தில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் மந்திரிகள் கிரிஷ் மகாஜன், சுதீர் முங்கண்டிவார், ஆஷிஸ் செலார், வினோத் தாவ்டே, கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து ஆசாத் மைதான போராட்ட மேடையில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு துரோகம்

மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. தேர்தலில் வாக்குறுதி அளிக்காதபோதிலும் எங்கள் ஆட்சியில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் குறைந்தப்பட்ச செயல் திட்டத்தில் கூறி இருந்தாலும், பயிர்க்கடன் திட்டத்தை செயல்படுத்தவில்லை.

பயிர்கடன் தள்ளுபடி தொடர்பாக தவறான வாக்குறுதி அளித்த அரசுக்கு எதிராக கோலாப்பூரில் 50 ஆயிரம் விவசாயிகள் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அது குறித்த கடிதத்தை கவர்னரிடம் கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story