கடைகளுக்கு சீல்: காய்கறி வியாபாரிகள் நகராட்சியை விடிய விடிய முற்றுகை
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சக்திநகரில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட்டில் 134 திண்ணை கடைகள் உள்ளன. அங்குள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை சரியாக செலுத்தவில்லை. கடந்த 2½ ஆண்டுகளாக கடை வாடகை ரூ.92 லட்சம் கட்டாமல் இருந்தனர். இதனை தொடர்ந்து தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தகவல் அறிந்த மார்க்கெட் கடைக்காரர்கள் வியாபாரிகள் சங்க தலைவர் வஜ்ஜிரம் தலைமையில் கலெக்டர் சிவன்அருளை நேற்று முன்தினம் இரவு சந்தித்து மனு அளித்தனர். அப்போது வாடகை செலுத்துவதாக உறுதி அளித்த அவர்கள் தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளரை சந்தித்து பேசும்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து அவர்கள் திருப்பத்தூர் நகராட்சிக்கு இரவு சென்றனர். அப்போது அவர்கள் 134 கடைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் தேங்கி உள்ளது. மேலும் திருவண்ணாமலை, பெங்களூரு, பெல்காம் பகுதிகளில் இருந்து லாரிகளில் தக்காளி மற்றும் காய்கறிகள் வந்துள்ள. அவற்றை இறக்கி கடைகளுக்கு கொண்டு சென்று மின்விசிறியை போட்டு காற்றாட வைக்க வேண்டும். இல்லை என்றால் பல லட்ச ரூபாய் தக்காளி மற்ற காய்கறிகள் அழுகிவிடும்.
பல முறை நாங்கள் வாடகை செலுத்தும் போதும் கம்ப்யூட்டரில் வாடகை பணம் ஏறவில்லை எனக்கூறி நகராட்சி அதிகாரிகள் வாங்க மறுத்து விடுகின்றனர். எனவே நாங்கள் வாடகை பாக்கியை செலுத்தி விடுகிறோம். உடனடியாக மார்க்கெட் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுங்கள் என ஆணையாளர் சுதாவிடம் கூறினர். ஆனால் ஆணையாளர் முறையாக பதில் அளிக்காததால் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்கள்.
தகவலறிந்த அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நகராட்சி ஆணையாளரிடம் வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். ஆனால் நகராட்சி ஆணையாளர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். நகராட்சிக்கு முன்பு தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்தார். அவரிடம் காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என கூறினர். அது குறித்து ஆணையாளரை தாசில்தார் சந்தித்தபோது சீலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் நேரில் சென்று ஆணையாளரிடம் அது குறித்து கூறியபோது சீலை அகற்ற முடியாது என கூறிவிட்டார். தொடர்ந்து நேற்று காலை 3 மணி வரை போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வேலூர் நகராட்சி மண்டல இயக்குனர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் சுதா காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், தாசில்தார் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் காய்கறிகளை நகராட்சிக்கு முன்பு எடுத்து வந்து கொட்ட முயன்றனர்.
Related Tags :
Next Story