பொக்காபுரத்தில், காட்டுத்தீ பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொக்காபுரம் கோவில் விழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கூடலூர்,
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஊட்டியில் இருந்து தலைகுந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக பொக்காபுரத்துக்கு சாலை செல்கிறது. இதேபோல் பைக்காரா, நடுவட்டம், கூடலூர், முதுமலை, மசினகுடி வழியாக பொக்காபுரத்துக்கு மற்றொரு சாலை செல்கிறது. அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால் கல்லட்டி மலைப்பாதை வழியாக வெளியூர் வாகனங்களை போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுவது இல்லை.
இந்த நிலையில் பொக்காபுரம் கோவில் திருவிழா காலங்களில் கல்லட்டி மலைப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாதை செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை வனத்துக்குள் வீசி செல்ல வாய்ப்பு உள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனம் பசுமை இழந்து வருகிறது. இதனால் பக்தர்களால் காட்டுத்தீ பரவ வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு கல்லட்டி மலைப்பாதையில் 18 முதல் 36-வது கொண்டை ஊசி வளைவு வரையில் பல கி.மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சாலையோரம் கருகிய புற்களுக்கு வனத்துறையினர் தீ வைத்து பாதுகாப்பாக சில மீட்டர் தூரம் வரை எரிய விடுகின்றனர். பின்னர் புற்கள் நன்கு கருகியதும், அதை உடனடியாக அணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் கவனக்குறைவாக சிகரெட் துண்டுகள், தீப்பெட்டிகளை சாலையோரம் வீசினால் தீப்பிடிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறியதாவது:- பொக்காபுரம் கோவில் விழாவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகின்றனர். அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால் பக்தர்களால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களும் வனத்தில் நன்மைகளை கருத்தில் கொள்ள வேண்டும். இதுதவிர காட்டு யானைகள், புலிகள், கரடிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் திருவிழா நாட்களில் வனத்துக்குள் செல்லக்கூடாது. இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்கள் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கோவில் விழாவை சிறப்புற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story