ஓ.என்.ஜி.சி. வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


ஓ.என்.ஜி.சி. வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2020 12:30 AM GMT (Updated: 26 Feb 2020 7:02 PM GMT)

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள ஓடாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடங்கிய பின்னர் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டதாகவும், இதனால் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தென்னங்குடி கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு எண்ணெய் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளிடம் கிராம மக்கள், குடிநீர் வசதி தொடர்பான கோரிக்கை மனு குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று ஓ.என்.ஜி.சி. வாகனங்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்வேலி அமைப்பு

வாகனங்களை மறித்து முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வைப்பூர் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகளிடம் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்திய பின்னர் வாகனங்களை விடுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story