பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது


பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 6:00 AM IST (Updated: 27 Feb 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வாடகை வீட்டை காலி செய்ய மறுத்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் நேற்று திடீரென கைது செய்தனர்.

சேலம்,

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் வசித்து வருபவர் ஆஷா குமாரி. இவரது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் வாடகை ஒப்பந்தம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு ஆஷா குமாரி, பியூஸ் மானுசிடம் கூறி வந்துள்ளார். அதற்கு வீட்டில் மராமத்து வேலை செய்துள்ளதால், வீட்டை காலி செய்ய முடியாது என்று அவர் மறுத்துள்ளார்.

வழக்கமாக பியூஷ் மானுஷ் வாடகை பணத்தை ஆஷா குமாரியின் வங்கி கணக்கில் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதால் கடந்த 10 மாதங்களாக வாடகை பணத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைக்காத வகையில் ஆஷா குமாரி தடை செய்து விட்டார். இதையடுத்து பியூஸ் மானுஷ் வாடகை பணத்தை சேலம் கோர்ட்டில் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஷா குமாரி தனது வீட்டை காலி செய்யுமாறு பியூஸ் மானுசிடம் வலியுறுத்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அவர், வீட்டை காலி செய்யமுடியாது என்று கூறியதுடன் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆஷா குமாரி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பியூஸ் மானுஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

இந்த வழக்கு தொடர்பாக பியூஸ் மானுசை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

பின்னர் அவர் சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story