சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது


சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.37 லட்சம் மோசடி வக்கீல் கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 12:00 AM GMT (Updated: 26 Feb 2020 8:48 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கில் வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கலைசெல்வன். இவரது மனைவி கனிமொழி (வயது43). இவர் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் தங்களது மகன் அடல்பிஹாரி அலெக்சாண்டருக்கு வேலை தேடி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சதீ‌‌ஷ்குமார் (35) என்பவரிடம் வேலை கேட்டு அணுகி உள்ளனர். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். எனவே சென்னை ஐகோர்ட்டில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.4½ லட்சம் செலவாகும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதை உண்மை என நம்பி கனிமொழி, வக்கீல் சதீ‌‌ஷ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் மற்றும் ரொக்கமாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4½ லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சதீ‌‌ஷ்குமார் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.

ரூ.37 லட்சம் மோசடி

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் கனிமொழி புகார் செய்தார். அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், வக்கீல் சதீ‌‌ஷ்குமார், சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 11 பேரிடம் ரூ.37 லட்சத்து 8 ஆயிரம் வாங்கி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதீ‌‌ஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் நாமக்கல்லில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story